வியாழன், டிசம்பர் 02, 2010

அனாதை யாருமில்லை; குருதேவரே தந்தை

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்
முன்னுள்ள தோரண வாயில்

தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருக்­கிறார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்திய பெரியவர் அங்கு வருகிறார். அவரைக் கண்டதும் புதிதாய் வந்த மாணவன் ஒருவன் விம்மி அழுகிறான். அவர் அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்கிறார்.

“உங்கள் அனைவருக்கும் அப்பா குரு மகராஜ்; அம்மா சாரதாமணி; அண்ணன் விவேகானந்தர். அவர்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார். மாணவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு, அங்கிருந்து செல்கிறான்.

இச்சம்பவம் நடந்தது 1980ம் ஆண்டு. அந்த வெண்ணிற ஆடை பெரியவர் தான் பிரம்மச்சாரி ராமசாமி அடிகள். ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை உயர்த்துவதே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மகான் அவர்.

ஈரோடு மாவட்டம், சத்திய­மங்கலம் அருகிலுள்ள கெம்ப­நாயக்கன் பாளையத்தில் பிறந்த ராமசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி சித்பவானந்தரால் ஆன்மிகப் பாதைக்கு இழுக்கப்பட்டவர். அவரது அணுக்கத் தொண்டராக இருந்த ராமசாமி பிறகு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக 1949ல் திருச்சி அருகிலுள்ள திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்’ என்ற தர்ம ஸ்தாபனத்தைத் துவக்கினார். .

.ஐந்து அனாதைச் சிறுவர்­களுடன் சிற்றோடையாகத் துவங்கிய இந்த அறப்பணி, இதுவரை 3,000க்கு மேற்­பட்ட ஆதரவற்றோரின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறது. தற்போது, இக்குடிலில் 300 மாணவர்­கள் இருக்கிறார்கள். இவர்­களுக்கென குடில் வளாகத்­திலேயே ஆரம்பப் பள்ளி­யும் உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன.

.
இங்குள்ள மாணவர்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதுதான் விசேஷம். பெரிய வகுப்பு மாணவர்கள் சமையல் செய்கிறார்கள்; மாணவர் விடுதிகளைப் பராமரிப்பது மற்றொரு மாணவர் குழு; பசுமடத்தைப் பராமரிக்க ஒரு மாணவர் குழு; கட்டிடங்களை சுத்தப்படுத்துவது ஒரு மாணவர் குழு; பூஜை வழிபாடுகளை நடத்துவது ஒரு மாணவர் குழு. இவ்வாறு மாணவர்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் மாணவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் அவர்கள் வளர்கிறார்கள்.
.
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள 70 ஏக்கர் நிலம், அழகிய தென்னந்தோப்பாக விரிந்திருக்­கிறது. இதை அமைத்தவர்களும் மாணவர்கள்தான், பராமரிப்­பதும் மாணவர்கள்தான். இந்த தோப்பில் கிடைக்கும் வருவாய், மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்கு போதுமானதாக இருக்கிறது.
.
தற்போதைய கல்வி ஏட்டுச்சுரைக்காயாக மாறியுள்ள நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலில் ஆதரவற்ற மாணவர்­களுக்கு அற்புதமான வாழ்க்கைக் கல்வி அளிக்கப்படுகிறது. பாரம்பரியமான குருகுலம் போன்ற அமைப்புடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்­ஸரின் ஆசிகளுடன், குடில் ஒரு சரணாலயமாக விளங்கி­வருகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்த பிரம்மச்சாரி ராமசாமி செய்த தவ முயற்சிகளை விவரிக்க இங்கு இடம் போதாது.
.
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை குடிலில் சேர்ப்பதே மிக சிரமமான பணி. கிறிஸ்தவ மிஷனரிகள் இதற்கென மிகப்பெரும் ‘நெட்ஒர்க்’ உடன் பல கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கு­கின்றன. அத்தகைய அசுர பலத்துக்கு முன், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசத்தை மட்டுமே நெஞ்சில் கொண்டு, மிகப்­பெரிய அறநிலையத்தை உருவாக்கி வளர்த்தெடுத்­திருக்கிறார், பிரம்மச்சாரி ராமசாமி. இவருக்கு பக்க பலமாக, கிருபானந்த வாரி­யார் சுவாமிகள், ஜஸ்டிஸ் மகா­ராஜன், திருச்சி முன்­னாள் கலெக்டர் மலையப்­பன், நங்க­வரம் பண்ணையார், ரங்க­நாதய்யர் உள்­ளிட்ட அன்பர்கள் பேரு­தவி புரிந்திருக்கிறார்கள்.
.
குடிலில் சேர்த்த குழந்தை­களைக் கொண்டே குடிலைப் பராமரித்து, அவர்களையே குடிலின் ஆதாரமாக மாற்றியதும் பெரும் சாதனை. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறன்று சந்தித்து மகிழ்கிறார்கள்.
.
இங்கு பயின்ற மாணவர்கள் மிகப்பெரிய பதவிகளில் இல்லாதபோதும், மன­நிறைவான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் ஐ.டி.ஐ., தொழில்­ படிப்பு முடித்து திறன்மிகு தொழி­லாளர்களாக உயர்ந்திருக்­கிறார்கள். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்­சந்திரனது உதவி அடித்தள­மிட்டது. குடில் மாணவர்­கள் பத்து பேருக்கு ஆண்டுதோறும் திருச்சி அரசு ஐ.டி.ஐ., யில் இடம் அளிக்க அவர் உத்தரவிட்­டது, இன்றும் தொடர்கிறது.
.
முன்னாள் முதல்வர்கள் காம­ராஜ், அண்ணா­துரை, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகி­யோர் இக்­குடிலுக்கு வருகை தந்து மகிழ்ந்­திருக்கிறார்கள்.
.
இங்கு பயிலும் மாணவர்­களிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ‘பிரம்மச்­சாரி’களாக தரம் உயர்ந்து குடிலை நிர்வகிக்கிறார்கள். குடிலின் தற்­போதைய தலைமை நிர்­வாகியான பிரம்மச்சாரி துரை, 1950 ல் இங்கு சேர்ந்த முன்னாள் மாணவர்தான். இவருக்கு துணை­யாக மேலும் நான்கு பிரம்மச்சாரிகள் குடிலை நிர்வகிக்கிறார்கள்.
.
குடில் வளாகம் எங்கும் விதவிதமான மரங்கள்; ஆன்மிக மணம் கமழும் கட்டிடங்கள்; பிரார்த்தனை மண்டபம் பேலூர் மடம் வடிவில் வரவேற்கிறது. குடிலின் எதிர்ப்புறம் ஸ்ரீ ராமகிருஷ்ண குருதேவரின் பிரமாண்ட­மான சிலை அருட்பார்வையுடன் அமைக்கப் பட்டிருக்­கிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு நன்கொடைகள் பெறப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.
.
இதுபற்றி கேட்டபோது, “வெள்ளி விழா (1979) ஆண்டிலேயே குடில் தன்னிறைவு பெற்றுவிட்டது. எங்கள் இப்போதைய தேவை, மாணாக்கர்கள்தான். பெற்றோரை இழந்த, 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் எத்தனை பேரை அழைத்து வந்தாலும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம், இந்த சேவையை அன்பர்கள் செய்தால் போதும்” என்கிறார் பிரம்மச்சாரி துரை.
.
இங்கு சேரும் மாணவரின் கணக்கில் வரவு வைக்கப்படும் ஆயிரம் ரூபாய், பள்ளிப்படிப்பு முடிந்து சொந்தக் காலில் நிற்கும் திறனுடன் மாணவன் வளர்ந்திருக்கும் போது அவனுக்கு வழங்கப்படுகிறது. அவன் குடிலிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு ஆயத்தமாகி வெளியேறுகிறான்; புதிய மாணவர்கள் குடிலில் நுழைகிறார்கள். குடில் ஓர் அழகிய, இனிய வேடந்தாங்கல் என்றால் மிகையில்லை.
.
சமுதாயத்திலுள்ள ஆதரவற்றோரின் எண்ணிக்கை பல மடங்காக இருப்பினும், ஸ்ரீராமகிருஷ்ணர் குடில் தன்னளவில் ஆர்ப்பாட்டமின்றி அரும்பணி புரிகிறது. சிறு நன்கொடை அளிப்பதைக்கூட விழாவாக எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் இக்காலத்தில், ஆரவாரம் இன்றி அகன்று ஓடும் காவிரி போலவே குடில், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற இலக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை நிறுவிய பிரம்மச்சாரி ராமசாமி அடிகளின் நினைவாலயம், காவிரிக்கரை அருகே அமைதியுடன் காட்சி அளிக்கிறது.
.
குடில் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, உதவியாக வந்த மாணவரிடம், “படிப்பு முடித்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டோம். அவன் நெஞ்சு நிமிர்த்தி சொன்ன பதில், மனதை நெகிழவைத்து­விட்டது. “என்னை... ஒரு ஆளாக்கி காத்த இந்த நிறுவனத்துக்கு உதவும் வகையில் ஏதாவதொரு வேலை செய்யவே எனக்கு விருப்பம்” என்று கூறினான், அந்த மாணவன்.

.
உங்கள் பகுதியில் உள்ள என்னைப் போன்ற ஆதரவற்ற மாணவர்களை இங்கு சேர்த்து விடுங்கள்” என்றும் அவன் வேண்டுகோள் விடுத்தான். சந்தனக் கலத்தில் வைத்த தேன் நறுமணம் கமழாது என் செய்யும்?

.
ஆன்மிக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவற்ற மாணவர்களுக்கு வாழ்க்கையும் கல்வியும் வழங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலுக்கு உதவி செய்ய விரும்பினால், உங்கள் பகுதியிலுள்ள அனாதை (யாருமில்லை; குருதேவரே தந்தை) களை இங்கு சேர்த்துவிடலாம், அவர்களுக்கு நீங்கள் காப்பாளர் ஆகலாம், இந்தப் புண்ணியம் உங்கள் சந்ததிக்கும் உதவும்.
.
தொடர்பு முகவரி:
பிரம்மச்சாரி துரை, நிர்வாகி,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்,
திருப்பராய்த்துறை,
திருச்சி - 639115.

தொலைபேசி: 0431- 2614235 / 2614548

------------------------------------------------

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் (16.10.2009)


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக