ஞாயிறு, ஜூன் 30, 2013

உத்தர்கண்ட் பேரழிவின் பாடங்கள்...


இயற்கைச் சீற்றங்கள் மனித பிரயத்தனங்களுக்கு சவால் விடுபவை. ஒருவகையில் இயற்கையின் சமன்வயத்தை சீர்குலைக்கும் மனிதனுக்கு எச்சரிக்கையாகவே இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுகளை உருவாக்குகின்றன. அண்மையில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவையும், அதைச் சமாளிக்கத் தெரியாமல் நமது அரசுகள் திணறியதையும் கண்டபோது, அனுபவங்களிலிருந்து நாம் எப்போதும் பாடம் கற்பதில்லை என்பது தெளிவானது.

நடந்தது என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, இடைவிடாத தொடர்மழையால், இமாச்சல், உத்தர்கண்ட் மாநிலங்களில் பெருத்த வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இம்மாநிலங்கள் இமயமலைச் சாரலில் உள்ளவை. பலத்த மழையால் மந்தாகினி, அலக்நந்தா, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை காணாத வகையில் வெள்ளத்தின் சீற்றம் இருந்தது. தொடர்மழையும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மலை மாநிலங்களில் பேரழிவை உருவாக்கின. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாகை, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்கள் வெள்ளத்தின் பாதையில் இருப்பதால் மிகுந்த அழிவுக்கு உள்ளாயின.

ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட பல அணைகளும் மிகக் குறுகிய காலத்தில் நிரம்பியதால், உடனடியாக அணைகள் திறந்துவிடப்பட்டன. இது வெள்ளத்தின் சீற்றத்தை அதிகரித்தது. இதுவரை காணாத மழையும் இதற்குக் காரணமானது. விளைவாக, ஆற்றின் கரையோர நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டன. சுமார் 60 கிராமங்கள் வெள்ளத்தால் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

புனிதத்தல சுற்றுலாவை நம்பியுள்ள உத்தர்கண்டில் ஹிந்துக்களின் மிக முக்கியமான புண்ணியத்தலங்கள் உள்ளன.  உத்தர்கண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 தலங்களுக்கு புனித யாத்திரை செல்வது விசேஷமானது. இதற்கு “சார் தாம் யாத்ரா” என்று பெயர். நாடு முழுவதிலுமிருந்து செல்லும் பக்தர்கள் இந்த யாத்திரையை இதயப்பூர்வமாக நடத்துகின்றனர். ஜூன் 17 ம் தேதி, வெள்ள பாதிப்புக்கு உள்ளானபோது இப்பகுதிகளில் லட்சக் கணக்கான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலைகுலைந்த அரசுகள்:

ஆரம்பத்தில் இயற்கைச் சீற்றத்தின் அளவும் பாதிப்பும் மத்திய, மாநில அரசுகளால் உணரப்படவில்லை. கேதார்நாத்தில் இருந்த பெரும்பாலான கட்டடங்களும், கோயிலின் சுற்றுப்புறக் கட்டுமானங்களும் வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டதை இரண்டு நாட்கள் கழிந்த பிறகே மாநில அரசு உணர்ந்தது. இந்த வெள்ளத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம். ஆனால் மாநில அரசோ, நூறு பேர், இருநூறு பேர் என்று மனம் போன போக்கில் பலியானோரின் எண்ணிக்கையை குறைத்துக் கூறிக் கொண்டிருந்தது. வெள்ளச்சேதத்தின் விபரீத வடிவத்தை 10 நாட்களுக்குப் பின்னரே மாநில முதல்வர் விஜய் பகுகுணா ஒப்புக்கொண்டார். இதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக இருக்கலாம் என்றார் அவர்.

வெள்ளம் பாதித்த உடன் நமது அரசுகள் செய்வதறியாமல் திக்பிரமையில் ஆழ்ந்தன. மலைப்பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் நிலைகுலைந்தன. பலத்த மழையால் நேரிட்ட நிலச்சரிவுகளும் மக்களை பந்தாடின. போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டன. தொலைதொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. அதிகாரவர்க்கம் என்ன நடந்து என்றே தெரியாமல் தத்தளித்தது. வெள்ளத்தால் 1,100 சாலைகளும், 94 பாலங்களும் சிதைந்துவிட்டன. கேதார்நாத்தில் மட்டும் ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் கபளீகரமாகிவிட்டன.

உடனே சுதாரித்துக் கொண்டது தேசிய பேரிடர் மீட்புப் படையும், நமது ராணுவமும் தான். இவர்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, திபெத் இந்தோ- திபெத் படை, உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மக்களை மீட்கப் போராடினார்கள்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போக மீதமுள்ள பக்தர்களைக் காக்க வீர்ர்கல் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, நேரம் காலம் பாராம்ல் உழைத்தார்கள். இவர்களின் கடும் உழைப்பாலும், சேவையாலும் சுமார் 80 ஆயிரம் பேர் முதல் ஒருவார காலத்தில் மீட்கப்பட்டார்கள். இந்த மீட்புப் பணிகள் சாகச வரலாறாகப் பதிய வேண்டியவை. இப்பணியில் பல காவலர்களும் ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். பக்தர்களை மீட்கச்சென்று விபத்தில் சிக்கிய (ஜூன் 26) ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் 20 பேரின் உயிர்த்தியாகம் சாதாரணமானதல்ல.

உடனடி மீட்புப் பணியில் மட்டுமல்ல, நிவாரண நடவடிக்கைகளிலும் ராணுவமே முன்னிலை வகித்தது. வெள்ளத்தில் சிக்கிய பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவுப்பொருள்களை விமானத்தில் சென்று போட்டது, எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளிலும் காடுகளிலும் முடங்கிய மக்களை பாராசூட் வீரர்கள் களமிறங்கி மீட்டது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாதை அமைத்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் இருந்த பகுதிகளில் தற்காலிகப் பாலங்கள் அமைத்தது ஆகிய பணிகள் தான் மீட்புப்பணிகளின் அடிப்படை.

இவை தவிர, ஆங்காங்கு ஆறுகளில்  மிதக்கும் சடலங்களையும், மண்ணில் புதைந்த சடலங்களையும் மீட்டு, அவற்றை அடையாளம் கண்டு ஒப்படைப்பது, மிகவும் சிதைந்த சடலங்களை தகனம் செய்வது போன்ற பணிகளிலும் வீர்ர்கள் ஈடுபட்டனர். கிடைத்துள்ள தகவல்களின் படி (ஜூன் 28 நிலவரம்) இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரழிவின் கொடுமையை இந்த ஒரு புள்ளிவிவரமே காட்டுகிறது.

இதில் குறிப்பிட வேம்டிய விஷயம், ராணுவத்துக்கு உதவியாக ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் செய்துவரும் சேவைப்பணி தான். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட ஜூன் 17-ம் தேதி முதலாகவே, ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் களத்தில் உள்ளனர். செல்லப்போனால், ராணுவத்துக்கு முன்னதாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்தவர்கள் அவர்கள் தான். ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்க தளம் அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். இந்த விவரங்கள் எந்த ஊடகத்திலும் இதுவரை வெளிவரவில்லை.

மீட்புப் பணியில் அரசியல்:

எங்கும் பேரழிவு காணக் கிடைக்கையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டிருந்தது வேதனையான வேடிக்கை. உத்தர்கண்ட் மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி தான். மத்தியில் கூட்டணி ஆட்சி செய்வதும் காங்கிரஸ் தான். ஆனால் இவ்விரு அரசுகளிடமும் சரியான ஒருங்கிணைப்பில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மாநில அரசை குற்றம் சாட்ட, மாநில அரசோ, இயற்கைச் சீற்றம் குறித்து தெளிவான முன்னறிவிப்புகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகே இரு அரசுகளும் சூழலின் அபாயத்தை உணர்ந்து செயல்படத் துவங்கின. இப்போது புனித யாத்திரைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசிப்பதாகத் தகவல். தனது தோல்விகளை மறைக்க மத்திய அரசு ஆடும் நாடகம் இது.

இதனிடையே, உத்தர்கண்ட் மாநிலத்தில் சிக்கிக்கொண்ட தங்கள் மாநில பக்தர்களை மீட்க ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக முயற்சிகளைத் துவங்கின. இதில் முதல் அடி எடுத்துவைத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா; இதில் முத்திரை பதித்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

மத்திய, மாநில அரசுகள் நிலைகுலைந்திருந்த நிலையில் அதிகார வர்க்கம் எப்படிச்  செயல்பட வேண்டும் என்று பாடம் நடத்தும் வகையிலேயே மோடியின் மீட்புப்பணிகள் அமைந்தன. ’15 ஆயிரம் பேரை மோடி மீட்டார்’ என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தபோதும், அவரது மீட்புப்பணியின் நோக்கம் மர்றும் முறைகள் பாராட்டிற்குரியவையே. முதல்வரே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படையுடன் உத்தரகண்ட் வந்து, டேராடூனில் முகாம் அலுவலகம் அமைத்து, நவீன சாதனங்களைப் பயன்படுத்தி, 200 இன்னோவா கார்கள், 25 பேருந்துகள், 5 விமானங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கானோரை சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைத்தது அரிய பணியே. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்துவதே இந்த செயல்பாட்டின் முக்கிய நோக்கம். குஜராத்தில் நிகழ்ந்த நிலநடுக்க மீட்புப் பணிகளின் அனுபவமே அம்மாநில முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் உதவி உள்ளது எனில் மிகையில்லை.

ஆனால், இதை காங்கிரஸ் கட்சி ’மோடியின் சுயநலம்’ என்று விமர்சித்தது. மோடி அங்கு செல்வதற்கே முட்டுக்கட்டை போட முயன்றவர் தானே சுஷீல் குமார் ஷிண்டே! ’முக்கிய பிரமுகர்கள் உத்தர்கண்ட் வருவது மீட்புப் பணியை பாதிக்கும்’ என்று கூறி மோடி வருவதை அவர் தடுக்க முயன்றார். அதை மீறிச் சென்றே மோடி மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதே ஷிண்டே காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட வந்ததும் தனது அறிவுரையை மாற்றிக்கொண்டார்! எல்லாம் அரசியல் படுத்தும் பாடு!

மோடி அரசியலுக்காக மீட்புப் பணியில் ஈடுபடுவதாக்க் கூறும் காங்கிரஸ், அங்கு முதல் நாளிலிருந்தே ஆர்ப்பாட்டமின்றி சேவைப்பணிகளில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை.
இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்கே ’கின்னார்’ என்ற இடத்தில் 60 மணிநேரம் பலத்த மழையில் (ஜூன் 17) சிக்கி மீட்கப்பட்ட கதை காங்கிரஸ் கட்சியினரே அறிந்தது தான். அவரை மீட்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் எவ்வளவு துடிப்புடன் இறங்கின! அதே வேகத்துடன் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏன் மீட்புப் பணிகள் நடக்கவில்லை? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

செய்ய வேண்டியது என்ன?

இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களின்போது செய்ய வேண்டிய பணிகள் எவை? முதலில் அரசுகளும் அதிகாரவர்க்கமும் மந்தகதியில் இருந்து துயிலெழுவது அவசியம். அதிர்ச்சியிலிருந்து மீண்டு உடனே மீட்புப்பணியில் ஈடுபடுவது அதைவிட முக்கியம்.

இரண்டாவதாக, இயற்கைச் சீற்றங்களின் காரணங்களைக் கண்டறிந்து பாடம் கற்பது மிக முக்கியமானது. மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டியதும், காடுகளின் சமநிலையைச் சீர்குலைத்ததும், நதிகளின் போக்கில் மாற்றங்களை (அணைகள் அமைத்தல்) ஏற்படுத்தியதும் தான் பேரழிவுக்கு வித்திட்டுள்ளன. இவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இயற்கைப் பேரழிவில் வீடுகள், உடமைகளை இழந்துள்ள லட்சக் கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மட்டுமின்றி, வாழ்க்கை மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் நிலைகுலைந்த மக்களை பழைய நிலைக்கு மாற்ற பல கோடி செலவு செய்தாக வேண்டும். நிவாரண முகாம்களை ஓராண்டுக்கேனும் நடத்த வேண்டிய நிலை அங்கு நிலவுகிறது.

வெள்ளத்தில் சிதைந்த சாலைகள், பாலங்கள், வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மறுசீரமைப்பது பெரும் சவாலான பணி. இதற்கு குஜராத் மாநில அரசின் கட்ச் அனுபவங்கள் உதவக்கூடும்.

இந்தப் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒட்டுமொத்த தேசத்தின் அரவணைப்பையும் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு சுனாமி மீட்பு அனுபவங்கள் நமக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. சேவைப்பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் உள்ளிட்டோரை மாநில அரசு தக்க வகையில்- அரசியல் பாராமல்- பயன்படுத்திக் கொள்வது தேவையானதாகும்.

---------------------
விஜயபாரதம் (12.07.2013)

வெள்ளி, ஜூன் 21, 2013

ராசதந்திரமா? பணபலமா? ராஜ்யசபா தேர்தலில் தெரியும்!


தமிழகத்தில் ராஜ்யசபா (மாநிலங்களவை)  தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இம்மாதம் 27-ம் தேதி தேர்தல். கடந்த 14.06.2013 'விஜயபாரதம்' இதழிலேயே இதுகுறித்த விரிவான செய்தியை வாசகர்கள் படித்திருக்கலாம். இப்போது நிலைமை ஓரளவுக்கு தெளிவாகி இருக்கிறது.

இதில் ஆச்சரியப்பட வைத்திருப்பவர் அதிமுக தலைவி ஜெயலலிதா தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் வேட்பாளருக்கு அதிமுக எப்படியும் ஆதரவு தெரிவித்துவிடும் என்று நம்பி இருந்தது. அதிமுக ஆதரவு இருந்தால் ஜெயித்து விடலாம் என்பதால் அந்த ஒரு வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் பலத்த போட்டியும் இருந்தது. கட்சியின் அகில இந்திய  செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் கட்சியின் இப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் து. ராஜா ஆகியோருக்கு இடையே தான் போட்டி. கடைசியில் அவர்களது திட்டம் பகல் கனவாகி விட்டது.

அதிமுக தலைவி, தங்கள் கட்சி சார்பிலேயே 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதிமுகவின் சட்டசபை பலத்தில் (150)  அக்கட்சி  4 எம்பிக்களை பெறுவது திண்ணம். ஐந்தாவது எம்பியை பெற வேண்டுமானால் அக்கட்சிக்கு இன்னமும் 14 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இதை அறிந்தும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியை உருவாக்கி இருக்கிறார் ஜெயலலிதா.

இதன்மூலமாக இரு செய்திகளை ஜெயலலிதா மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அக்கட்சி யாரையும் சார்ந்து இல்லை என்பது அதில் முதன்மையானது. இரண்டாவது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக எதிர்க்கட்சி வரிசையில் பிளவுகள் உருவாக்கப்படலாம் என்பது.

ஏற்கனவே, தேமுதிக கட்சியின் 7 உறுப்பினர்கள் (கடைசியாக வந்து சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாபா பாண்டியராஜனையும் சேர்த்து) அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் சிலர் தேர்தலில் நிறம் மாறக்கூடும். இப்போதைக்கு பதைபதைப்பில் இருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அநேகமாக அக்கட்சி மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு தேமுதிக அறிவித்தால் வெற்றிக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 34-லிருந்து 33-ஆகக் குறையலாம்.

அப்போதும் அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதால், அதிமுகவும் ஐந்தாவது வேட்பாளர் வெற்றிபெற மேலும் 7 பேரின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கும். இதற்கு சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (2), புதிய தமிழகம் (2), பார்வர்டு பிளாக் (1) கட்சிகளின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஐந்தாவது அதிமுக வேட்பாளரின் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது. தேமுதிகவில் மேலும் உடைசல்கள் ஏற்படுவது திண்ணமாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக மற்றோர்  அறிவிப்பை வெளிட்டிருக்கிறார். அடுத்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது. தனித்தே 40 எம்பி இடங்களையும் வெல்வோம் என்றும் அவர் கூறி இருக்கிறார். அது நிறைவேறுவது கடினம் எனினும், அதிகப்படியான எம்பிக்களை அதிமுக வெல்லும் பட்சத்தில் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சி எந்தக் கூட்டணியின் ஆட்சியாயினும் அதில் அதிமுக பிரதான இடம் வகிக்க வேண்டும் எனபதே ஜெயலலிதாவின் திட்டம். அதற்காகவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்காமல் ஐந்தாவது வேட்பாளரை அவர் அறிவித்தார்.

அதிமுக ஆதரவு கிடைக்காதபோதும் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது உறுதியாகி இருக்கிறது. அக்கட்சிக்கு உள்ள 8 எம்எல்ஏக்களின் எண்ணிக்கையோடு மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்எல்ஏக்களின்  ஆதரவு உள்ளது. வெற்றி பெற மேலும் 16 பேரின் ஆதரவு தேவை. இப்போது அக்கட்சி தேமுதிகவுக்கு தூது அனுப்பி இருக்கிறது. முடிவு விஜயகாந்த் கையில்.

விஜயகாந்துக்கு தனது மைத்துனர் சுதீஷை மாநிலங்களவைக்கு அனுப்பும் ஆசை இருந்தது. கட்சியில் தொடர்ந்து வெளியேறி 'முதல்வரைச் சந்திக்கும்' தங்கள் கட்சி எம்எல்ஏக்களின்  புரட்சியால் அவரது கனவு சிதைந்துவிட்டது. சென்ற பஞ்சாயத்து தேர்தலில் தங்களைக் கைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி ஆதரிப்பது என்று கேப்டன் தயங்குவதாகத் தகவல். பண்ருட்டியார் அவரிடம் அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்.

தேமுதிக மாநிலங்களைத் தேர்தலைப் புறக்கணிக்காமல் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தால், எப்படியும் அக்கட்சியின் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வெற்றி பெற முடியும். மாறாக திமுகவை ஆதரிப்பதாக கேப்டன் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் தேமுதிக பிளவுபடுவது உறுதியாகும்.

தேமுதிகவை நாடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலதாவே அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். ஆறாவது எம்பியாக கம்யூனிஸ்ட் ஜெயித்தாலும் பரவாயில்லை, திமுக இம்முறை மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைக்கூட அனுப்பக் கூடாது என்று விரும்புகிறாராம் ஜெயலலிதா. ராசதந்திரத்தில் அம்மையார் செம்மொழி கொண்டானையே விழுங்கி விடுவார் போலிருக்கிறது. தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டால் அக்கட்சி சிறிய சேதாரத்துடன் தப்பிவிடும் என்பது அக்கட்சிக்கு புரிய வைக்கப்பட்டுகள்ளது

தவிர, ஊழல் குற்றச்சாட்டுகளால் கலகலத்துள்ள திமுகவை ஆதரித்து தனது அரசியல் எதிர்காலத்தை நிலைகுலையச் செய்ய வேண்டுமா என்ற கோணத்திலும் விஜயகாந்த் ஆராய்வதாக கூறப்படுகிறது.  எது எப்படி இருப்பினும்தேமுதிகவின் நிலைப்பாடு தான் இப்போது மிக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.

திமுகவிலோ, வெற்றிபெறத் தேவையான 34 என்ற எண்ணிக்கையை நெருங்க இன்னமும் அக்கட்சிக்கு தேவை 11 பேரின் ஆதரவு. தனது கூட்டணியில் இருந்தகாங்கிரஸ் (5), பாமக (3) ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும் வெல்வது கடினம். எனவே சிறு கட்சிகளுக்கு அக்கட்சி வலை வீசுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே?

எனவே சில்லறைக் கட்சிகளின் நிலைபாடுகளும் முக்கியமானவையாக மாறி உள்ளன. அக்கட்சிகள் கடைசி நேரத்தில் பெட்டிகளுக்கு தகுந்தவாறு கொள்கை விளக்கம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. பணம் தான் பிரதானம் என்ற அரசியல் உலகில் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்படும் பட்டங்கள் தானே? அநேகமாக கூட்டணி மாறல்கள் அப்போது தான் தெளிவாகும்.

அடுத்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுக்காக திமுக பரிதவிப்பதும் தான் இப்போதைய (21.06.2013) நிலை. காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மதில் மேல் பூனைகளாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தல் அரசியல் சதுரங்கத்திலும் ஒரு தெளிவு உண்டாக வழியை உருவாக்கும். அதற்கான பாதையை உருவாக்குவதில் பணபலம் பெரும் பங்கு வகிக்கும்.

கடைசியில், வெற்றி பெற்ற 6 உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க டில்லி செல்வார்கள். அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாமும் பார்க்கப்போவதில்லை; செல்பவர்களும் கவனிக்கப்போவதில்லை. நல்ல ஜனநாயகம். வளர்க இதன் புகழ்!

----------------
விஜயபாரதம் (28.06.2013)


திங்கள், ஜூன் 10, 2013

அந்த ஒரு இடம் யாருக்கு?


'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை' என்ற பொன்மொழி பிரபலமானது. தமிழகத்தில் இந்தப் பொன்மொழிக்கு எப்போதுமே கிராக்கி. சுயநல அரசியல் அறுவடைகளை நியாயப்படுத்த இந்தப் பொன்மொழி போல உதவக் கூடிய வேறு கருவி உண்டா என்ன?

இப்போது ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் காலம். தமிழகத்தில் ஜூலை 24-ல் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 22-ல் நடைபெறுகிறது. சென்ற முறை தமிழக சட்டசபையில் திமுக அதிக பலம் பெற்றிருந்ததால் அப்போது திமுக கூட்டணியினர் அதிகமாக ராஜ்யசபைக்கு சென்றனர். இப்போது நிலைமை தலைகீழ்.

ராஜ்யசபையில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்காது. இதில் குறிப்பிட்ட காலங்களில் பதவிக்காலம் முடிவடைவோருக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

மே மாத நிலவரப்படி மொத்தமுள்ள 18 எம்.பி.க்களில் திமுக-7, அதிமுக- 5, காங்கிரஸ் 4, மார்க்சிஸ்ட் 1, இந்தியா - கம்யூனிஸ்ட் 1 என பிரதிநிதித்துவம் உள்ளது. இவர்களில் கனிமொழி, திருச்சி சிவா (திமுக), மைத்ரேயன், இளவரசன் (அதிமுக), டி.ராஜா (கம்யூனிஸ்ட்), ஞானதேசிகன் (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கே தேர்தல் நடைபெற உள்ளது.

ஒரு ராஜ்யசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க, 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. மாறியுள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டசபையில் அதிமுக மிகுந்த பலத்துடன் உள்ள நிலையில் (150), அக்கட்சி சார்பில் 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அவர்களின் பெயர்களை கடைசி நேரத்தில் தான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்; யாருக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கலாம். மீதமுள்ள 14 உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி உள்ளது.

சென்ற முறை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது; அவரும் வென்றார். இப்போதும் அதிமுக ஆதரவை அக்கட்சி கோரியிருக்கிறது அக்கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தவிர மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் 10 பேரின் ஆதரவும் கிடைக்க உள்ளது. இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கும் எம்.பி. பதவி மீது ஒரு கண் இருக்கிறது; ஆசை யாரை விட்டது?

இப்போது உள்ள சிக்கல் இதுவல்ல. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சிக்கும் ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்யும் பலம் இல்லை. தே.மு.திக- 29, திமுக- 22, காங்கிரஸ்- 5, பாமக - 3 என முக்கிய கட்சிகளின் நிலைமை தவிப்பை உருவாக்குவதாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் சில்லறை எண்ணிக்கை அரசியல் பேரங்களுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும்.

இந்த சந்தில் சிந்து பாடுபவர் திமுக தலைவர் கருணா தான். அவருக்கு தனது செல்ல மகளை எப்படியும் ராஜ்யசபைக்கு அனுப்பிவிடுவது ஒரு கனவாகவே இருக்கிறது. கட்சிக்காக மேடைதோறும் முழங்கும் திருச்சி சிவாவுக்கு அவரது இதயத்தில் இடம் இருக்கிறது. கனிமொழி வெல்ல இன்னமும் தேவை 12 பேரின் ஆதரவு. இதற்காகத் தான் அலைபாய்கிறார் ராசதந்திரி.

ராஜ்யசபை தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் கூட்டணிகளில் புதிய மாற்றத்தையும் வியூகத்தையும் வகுக்க அவர் துடிக்கிறார். அதற்காக மத்திய அரசிலிருந்து தள்ளாத குறையாக வெளியேற்றிய காங்கிரஸ் கட்சியுடனும் கூட சமரசமாகப் போகவும் அவர் தயார். ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்லாது ஐ.பி.எல். ஊழலும் அவரது வீட்டுக் கதவைத் தட்டும் நிலையில் உள்ளபோது, ராசதந்திரம் மிகவும் தேவை அல்லவா?

காங்கிரஸ் கட்சியின் 5 பேர் ஆதரவு கிடைத்தாலும் கூட கனிமொழி வெற்றிபெறப் போதாது எனவே தான், "நாவடக்கம் ராமதாசுக்கு வேண்டும்" என்று அண்மையில் சொன்ன அதே கலைஞரின் மகள், அதே டாக்டர் ராமதாசை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். அக்கட்சியின் 3 எம்.எல்.ஏ. ஆதரவுக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? இவை மட்டுமல்லாது 4 மேலும் பேரின் ஆதரவுக்காக வலை வீசுகிறது திமுக. அரசியலில் வெற்றி தானே முக்கியம்? வெட்கம், மானம் எல்லாம் பார்க்க முடியுமா?

பாமகவுக்கும் இப்போது ஒரு நிழற்குடை தேவை. தமிழகத்தின் அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பரிதவிக்கும் ராமதாசுக்கு இப்போது பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவை. அது திமுகவாக இருந்தால், அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சேர்ர்ந்தால், டாக்டர் அன்புமணி சந்திக்க உள்ள சி.பி.ஐ. வழக்குகளுக்கும் உதவியாக இருக்கும் அல்லவா?

காங்கிரஸ் கட்சிக்கோ தனித்து ஜெயிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரியும்,. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவனுக்கு தர்ம அடி விழும் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியே யாரேனும் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு எம்.பி. இடத்துக்கு 20 பேர் போட்டியிடுவார்கள். உள்கட்சி ஜனநாயகம் என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் பாடம் கற்க வேண்டும். எனவே இப்போதைக்கு திமுகவை ஆதரிப்பதே ராசதந்திரம். ஒரே நெருடல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கனிமொழியை ஆதரிப்பது எப்படி என்பது தான். ஸ்பெக்ட்ரம் ஊழலையே விழுங்கி ஏப்பம் விட்ட பிரதமரும் சோனியாவும் இருக்கும் துணிச்சலில் காங்கிரஸ் நல்ல முடிவெடுக்கலாம்.

ஆக மொத்தத்தில், அதிமுக கூட்டணி (?) ஜெயித்தது போக, மீதமுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆலாய்ப் பறக்கின்றன. இந்த ஓட்டப் போட்டிக்கு தகுதி இருந்தும் தேமுதிக அடக்கி வாசிக்கிறது ஏற்கனவே அக்கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் தலைமையுடன் பிணங்கி நிற்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை க் காப்பதே விஜயகாந்திற்கு சோதனையாக மாறி இருக்கிறது. இனிவரும் நாட்களில் எந்த தேமுதிக எம்.எல்.ஏ. கட்சி மாறப் போகிறாரோ? அம்மாவுக்கே வெளிச்சம்.

எனவே, அவரது ஆதரவைப் பெறவும் கருணா தூண்டில் போடுகிறார். இந்தத் தூண்டிலில் விஜயகாந்த் விழுவாரா? அதற்கு சில நாட்கள் நாம் பொறுத்திருக்கத் தான் வேண்டும். அரசியலில் தான் நிரந்தர நண்பரோ நிரந்தரப் பகைவரோ இல்லையே? அது ஒரு நிரந்தர வியாபாரம் தானே?




----------------------
விஜயபாரதம் (14.06.2013)

ஞாயிறு, ஜூன் 09, 2013

நானும் காந்தியவாதி தான்!


மகாத்மா காந்தியின் பென்சில் குறித்த கதை உங்களுக்குத் தெரியுமா? காந்திஜி பயன்படுத்திவந்த பென்சில் மிகவும் சிறிதாகிவிட்டதால் அதை அவரது உதவியாளர், அது இனித் தேவையில்லை என்று முடிவு செய்து வீசி எறிந்துவிட்டார். அதை அறிந்த காந்திஜி தனது உதவியாளரை கடிந்துகொண்டார். ''அது சிறிதாக இருந்தாலும் இன்னமும் சில நாட்களுக்கு வருமே. அது பொதுச் சொத்து அல்லா? அதை வீசி எறிய உனக்கு யார் உரிமை அளித்தது?'' என்று கேட்டாராம் காந்திஜி. பிறகு வேகுநேரம் தேடி அதை கொண்டுவந்து கொடுத்தாராம் காந்திஜியின் உதவியாளர்.

இது கதையல்ல நிஜம். பொதுவாழ்க்கையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக அவர் இருந்தார். அதனால் தான் சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எளிமையை அனுசரிப்பவர்களாகவும், பொதுச் சொத்துக்களின் பாதுகாவலராகவும் இருந்தார்கள். காந்திஜியின் ஒரே வார்த்தைக்காக குடும்பம், சொத்து சுகங்களை துறந்து நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்லாயிரம் பரிசுத்தவான்களை நாம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காண முடியும்.

காந்தி கணக்கு என்பது அது தான். அரையணா ஆயினும் பொதுச்சொத்து என்றால் அதற்கு தெளிவான கணக்கு இருக்க வேண்டும். எதையும் விரயம் செய்யும் உரிமை பொதுநல சேவகனுக்கு கிடையாது என்பதே அவர் காட்டிய பாதை. ஆனால் நாம் இன்று 'காந்தி கணக்கு' என்று எதைச் சொல்கிறோம்? கணக்கில் காட்டாமல் மறைக்கும் மோசடிகளுக்கு நாம் செய்யும் நாமகரணம் 'காந்தி கணக்கு' என்றாகி இருக்கிறது. ஊழலால் ஒரு வங்கி திவாலானாலும் அதை 'காந்தி கணக்கு' என்று தான் நமது ஊடகங்கள் எள்ளி நகையாடுகின்றன. நமது தார்மிக வீழ்ச்சியின் அபாயகரமான போக்கிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே

அதுசரி, காந்தியின் உண்மையான வாரிசுகள் பலர் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களையா நாம் காந்தியின் வாரிசுகளாக அங்கீகரித்திருக்கிறோம்? நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வகையறாக்கள் தானே?

முற்காலத்தில் 'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்று சொல்வார்கள். மக்களாட்சிக் காலத்தில் இதையே 'மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி' என்று திருப்பிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். மாவுக்குத் தகுந்த பணியாரம் போல மக்களுக்குத் தகுந்த ஆட்சியாளர்கள் தான் கிடைக்கிறார்கள். பிரதமர் என்ற பெயரில் நமது நாட்டை கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கும்பலின் தலைவராக இருக்கும் மன்னுமோகன் சிங்கை குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது உண்மையே.

***

பிரதம மன்னுமோகன் சிங் தனது ஆட்சியின் 9வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடி இருக்கிறார். 2004-ல் வாஜ்பாய் தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொதுத் தேர்தலில் தோற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. அன்று முதல் பிரதமராக மன்னும்கன் இருக்கிறார். 2009 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலாகக் கருதப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தேறியது. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலால் காங்கிரஸ் அரசை அசைக்க முடியவில்லை ஏனெனில் ஊழலால் தான் அந்த ஆட்சியே நிலைகொண்டிருந்தது.

1986-1989-நட் ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்தபோது, வெறும் ரூ. 60 கோடி கமிஷனுக்காக ஆசைப்பட்டு ஆட்சியைப் பறிகொடுத்தார் ராஜீவ். அவரது வழித் தோன்றல்களோ, அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அதன்மூலமாக ரூ. 60 ஆயிரம் கோடி வரை (இது ஒரு உத்தேச மதிப்பீடு மட்டுமே) லஞ்சம் பெற்றும்கூட எந்த வெட்கமும் இன்றி ஊழல் நடைபெறவே இல்லை என்று செப்பித் திரிந்தனர். மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் வினோத் ராய், நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்ற நீதிபதி கோகலே போன்றவர்களின் நெஞ்சுரம் மிக்க செயல்பாடுகள் இல்லாமல் போயிருந்தால் ஸ்பெக்ட்ரம் மோசடியை புதைத்து அதன் மீது நினைவுச் சின்னமே அமைத்திருப்பார்கள் காங்கிரஸ் காரர்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமா? மும்பை ஆதர்ஷ் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஊழல், புதுதில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், அதிகாரத்தரகர் நீரா ராடியா ஊழல், ஐ.பி.எல். ஊழல் எனப் பல ஊழல்கள் அணிவகுத்து காங்கிரஸ் கட்சியின் புகழுக்கு மகுடம் சூட்டின. ஒவ்வொரு ஊழல் வெளிப்ப்படும்போதும் அதை சமத்காரமாக மறைப்பதும் மறுப்பதும் மன்னுமோகன் கும்பலின் வழக்கம். பிறகு பிரச்னை உச்சத்தை எட்டும்போது ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, சசி தரூர் போன்ற பலிகடாக்களை படையலிட்டு தப்பிவிடுவதும் காங்கிரஸ் கட்சியின் பழக்கம்.

இத்தனை ஊழல்கள் நடந்த பின்னரும் அதே காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு இரண்டாம் முறை நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்த மக்களை என்சொல்ல? ஊழலை விட மதச்சார்பின்மை கோஷங்களும் ஜாதி கணக்கீடுகளும் தானே 2009 தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின? பணபலம் தானே தேர்தல் முடிவுகளை நிர்ணயித்தது? பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி வென்றுவிடக் கூடாது என்று முனைப்புக் காட்டிய ஊடகவாலாக்கள் முன்னிறுத்தி புளகாங்கிதம் அடைந்தது 'காந்தி' குடும்ப அங்கத்தினர்களை அல்லவா? அதன் விளைவு தானே இப்போதைய இரண்டாம் ஆட்சிகால ஊழல்களின் பெருக்கம்?

***

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலமானபோது இதைவிடப் பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்று நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையையும் காங்கிரஸ் கட்சியே முறியடித்தது. தனது ஊழல் சாதனையை தானே முறியடித்த கட்சி உலக வரலாற்றில் உண்டென்றால் அது காங்கிரஸ் தான். ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல்கள் சென்ற ஆண்டு அம்பலமானபோது நாட்டுமக்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் இப்போது ஊழல்களைக் கேட்டு மரத்துப் போக பழகிவிட்டார்கள்.

முந்தைய ஸ்பெக்ட்ரம் ஊழல் போலல்லாது, நிலக்கரி ஊழலில் பிரதமரே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார். எனினும் அதை மூடி மறைக்க காங்கிரஸ் துடிக்கிறது. இம்முறையும் மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் வினோத் ராய் தான் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார். இப்போது அவரது பதவிக்காலமும் மே மாதம் முடிந்துவிட்டது புதிய அதிகாரி என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

இதனிடையே பொதுநல வழக்குகள் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நிலக்கரி ஊழல் மீதான விசாரணை பெரும் புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் பெருமூளைகள் வழக்கம்போல இதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஊழலை மறைக்க முயன்றார்கள். மத்திய புலனாய்வு அமைப்பை தங்கள் கைப்பாவையாக்கி, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்திலேயே திருத்தம் செய்தார்கள். கடைசியில் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனரே, இந்த மோசடியை அம்பலப்படுத்தினார். இப்போது பலிகடாவாகி இருக்கிறார் சட்ட அமைச்சராக இருந்த அஸ்வினிகுமார். மத்திய புலனாய்வு அமைப்புக்கும் குட்டு விழுத்திருக்கிறது!

ரயில்வே துறையில் அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர் நடத்திய ஊழல் வெளியானபோதும் காங்கிரஸ் கட்சி அசரவில்லை. எப்போதும்போல 'ஊழலே நடக்கவில்லை' என்று பிலாக்கனம் தான் பாடினர் காங்கிரஸ் தலைவர்கள். கடைசியில் நாடாளும்றக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளில் ஆவேசத்தால் முடங்கி வீணான பிறகு, பதவி விலகினார் பன்சால். சட்டம் தன கடமையைச் செய்யும் என்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அவர் சிவகங்கையில் எம்.பி. தேர்தலில் ஜெயித்ததே முறைகேடாகத் தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; சாத்தான் வேதம் ஓதுகிறது! மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடியில் ப.சி.யின் மனைவியாருக்கும் பங்கு இருப்பதாகத் தகவல். அப்படி இல்லாமல் இருந்தால் தானே ஆச்சரியப்பட வேண்டும்?

இந்நிலையில், தனது இரண்டாவது கட்ட ஆட்சியின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆட்சி குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் மன்னுமோகன். அறிவுஜீவிகள் என்று கருதிக்கொள்ளும் சிலர் தயாரித்த அறிக்கை இது என்பது, இதிலுள்ள புல்லிவிவரங்களைக் காணும் போதே புரிகிறது; புள்ளிவிவரங்கள சோறு போடுவதில்லை.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வால் தொழில்துறை விழி பிதுங்குகிறது. ஊழல்களின் பெருக்கத்தால் நாட்டின் மதிப்பு அதலபாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. மதச்சார்பின்மை என்ற பெயரில் வாக்குவங்கி அரசியல் நடத்துன் காங்கிரஸ் கட்சியால் மக்களிடையே ஒற்றுமை குலைந்திருக்கிறது.

இலங்கை, சீனா, நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம் என எந்த அண்டை நாடும் இந்தியாவை மதிப்பதாக தெரியவில்லை; சீனா த்துமீறி ஊடுருவி முகாம்களை அமைக்கிறது; நமது அரசு சீன அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. உன்ல்நாட்டுப் பாதுகாப்பிலோ சொல்லவே தேவையில்லை; எங்கு வேண்டுமாயினும் குண்டு வெடிக்கும் நிலைமை தான் நாடு முழுவதும் நிதர்சனம்.

உண்மையில், நமது பிரதமர் மன்னுமோகன் தனது ஆட்சியின் சீரழிவுகள் குறித்த வெள்ளை அறிக்கையைத் தான் வெளியிட்டிருக்க வேண்டும். தன்னை பின்னணியில் இருந்து யக்கும் 'காந்தி' குடும்பத்தின் அட்டூழியங்களை அவர் அறிக்கையாகத் தந்திருக்க வேண்டும். இது அதிகப்படியான ஆசை என்பதில் சந்தேகமில்லை.

இப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசில் பிரதமராக மன்னுமோகன் வீற்றிருக்கிறார். ஆனால், ஆட்சி அதிகாரம் சோனியா அமம்மையாரின் கரங்களில் இருக்கிறது. நாளைய பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்திக்கு வழித்தடம அமைக்கும் பணியில் எந்த வெட்கமும் இன்றி ஈடுபட்டிருக்கிறார் நமது பொருளாதார மேதை. சோனியா கும்பல் திரை மறைவில் நடத்தும் ஊழல்களின் விளைவை அனுபவித்தபடி, 'கெட்ட பெயர் எனக்கு; லாபமெல்லாம் உனக்கு' என்று சோனியாவிடம் லாவணி பாடியபடி இந்தப் பதவியில் இவர் ஒட்டியிருக்கத் தான் வேண்டுமா? ''சரித்திரம் முக்கியமானது அமைச்சரே'' என்று நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது!

***

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்தினால் தே.ஜ. கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு அண்மையில் வெளியாகி இருக்கிறது. இதைத் தடுக்க அனைத்து மாய்மாலங்களிலும் காங்கிராஸ் ஈடுபடத் துவங்கிவிட்டது. மத்தியப் புலனாய்வு அமைப்பை 'கூண்டுக்கிளி'யாக வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை மிரட்டி ஆட்சியில் நீடிக்கும் கலை அறிந்த காங்கிரஸ் கட்சி, பணபலத்தால் யாரையும் விலைபேசத் தயாராகி வருகிறது.

தே. ஜ.கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முன்கூட்டியே இறங்கிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள், மதரீதியாக மக்களின் வாக்குகளைப் பிளக்கவும் பல திட்டங்களை வகுத்து வருகிறார்கள். வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா அதற்காக உருவாக்கப்பட்டதே. ஏற்கனவே, மாணவர்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று பிரித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தாகிவிட்டது.

இவர்கள் தான் இன்று காந்தியத்தை காக்க வந்த மகாத்மாக்களாக உலா வருகிறார்கள். ஆங்கிலேய அரசிடமும் கூட பெருந்தன்மை காட்டிய மகாத்மா காந்தி கட்டிக் காப்பாற்றிய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை மிகவும் அருவருக்கத் தக்கதாக மாறிவிட்டது.

காந்திஜி வைத்திருந்த குரங்கு பொம்மைகள் குறித்து அனைவரும் அறிவோம். 'தீமையைப் பேசாதே; தீமையைப் பார்க்காதே; தீமையைக் கேட்காதே' என்பதே அந்த குரங்கு பொம்மைகள் சொல்லும் நீதி.

இப்போது நமது பிரதமர் மன்னுமோகன் கிட்டத்தட்ட அதே குரங்கு பொம்மையின் நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு பின்னால் சாட்டையுடன் நிற்கிறார் சோனியா காந்தி. உடன் நிற்கிறார் ராகுல் காந்தி. அருகில் நிற்கிறார் பிரியங்கா வதேரா காந்தி.

சாட்டைக்குக் கீழ்ப்படியும் சர்க்கஸ் விலங்கு போல, எந்த உண்மையையும் பேசவோ, காணவோ, கேட்கவோ தயாரில்லாத நிலையில் காட்சி அளிக்கிறார் நமது பிரதமர். அநீதி கண்டும் வாய்மூடி மௌனம் சாதிப்பது காந்தியம் என்றால் மன்னுமோகன் காந்தியவாதி தான். அவரை வழிநடத்தும் 'காந்தி' குடும்பம் தான் மகாத்மா காந்தியின் குடும்பம் என்று இன்னமும் நாட்டு மக்கள் எண்ணிக் கொண்டிருந்தால், மன்னுமோகனும் ஒரு மகாத்மா தான்.

-----------------
விஜயபாரதம் (07.06.2013)
.